குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன் வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது போடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெறக்கோரி நாகர்கோவில் நீதிமன்றம் முன்பு வாயில் கருப்பு துணி கட்டி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உள்ள பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கூறியதாவது: 

இந்திய உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். மேலும், நீதிமன்றங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் பல்வேறு நடைமுறைகளை எடுத்து வருகிறார்.

இத்தகைய மூத்த வழக்கறிஞர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து. அதில் அவர் குற்றவாளி என்று அறிவித்து உள்ளது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. நமது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக குறிப்பாக பேச்சுரிமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 இந்த தீர்ப்பு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் உடனடியாக கைவிட வலியுறுத்தி தேசிய அளவிலும் தமிழக அளவிலும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட நீதிமன்ற வாயிலில் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

 இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply