பேச்சிப்பாறை சோதனை சாவடியில் பொதுமக்கள் மறியல்..!

பேச்சிப்பாறை அருகே முடவன் பொற்றையை காணி குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன். இவர் தனது வீட்டின் அருகே கழிப்பறை கட்ட முடிவு செய்தார். இதற்காக மனோகரன் குலசேகரத்தில் இருநது கட்டுமான பொருட்களை ஒரு வாகனத்தில் ஏற்றி முடவன் பொற்றையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, பேச்சிப்பாறை சீரோபாயிண்ட் வன சோதனை சாவடியில் உரிய அனுமதி இல்லாததால் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதையறிந்த பேச்சிப்பாறை ஊராட்சி தலைவர் தேவதாஸ், துணை தலைவர் கலைசெல்வி, வார்டு உறுப்பினர் நிசார் மற்றும் பழங்குடி மக்கள் உள்ளிட்டோர் வன சோதனை சாவடி முன்பு திரண்டனர். பின்னர், திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பேச்சிப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடமும், வனத்துறை உயர் அதிகாரிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதைதொடர்ந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டது. பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply