அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு..!
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி ஊரக வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேலான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இன்றி திண்டாடி வரும் அவர்களுக்கு வேலைக்கான ஊதியத்தை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. இதில் கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது கரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி 55 வயதுக்கு மேலான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக எவ்வித வாழ்வாதாரமுமின்றி ஐயாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் 100 சதவீதம் பேருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் மேற்படி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பது அரசு விதிகளை மீறிய செயலாகும். எனவே வேலை மறுக்கப்பட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது வேலைகளை ஊதியத்தை நிவாரணமாக வழங்க பாதுகாத்திட வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் வேலை இருந்தும் அதற்கான நிதி ஆதாரங்கள் இருந்தும் பல ஊராட்சிகளில் வேலை வழங்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையின்றி கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு பாரபட்சமின்றி அனைவருக்கும் வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.