கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி..!

குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார் கொரோனாவால் நேற்று பாதிப்புக்கு ஆளானார். இவருக்கு வயது 45 ஆகும். இவர் கட்சிப்பணியிலும் சரி, கொரோனா தடுப்பு பணிகளிலும் சரி கடந்த சில மாதங்களாக தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி வந்தார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதற்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் நேற்று இரவு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர் கொரோனா தடுப்பு பணி மற்றும் தொகுதி மக்களுக்கான பணிகளில் ஈடுபட்ட போது கொரோனா தொற்றுள்ளவர் மூலம் இவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. தற்போது காய்ச்சல் தொடர்ந்து இருந்ததால் 2-வது முறையாக பரிசோதனை செய்த போது, அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் உள்ளிட்ட 2 நிர்வாகிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் இந்த 2 பேருடன் தொடர்பில் இருந்த தி.மு.க.வினர் பெரும் பீதிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,866 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். நாகர்கோவிலில் மட்டும் இதுவரை 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply