நாகர்கோவில் சிறையில் மேலும் 18 கைதிகள், ஒரு காவலருக்கு கொரோனா..!

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறை 230 கைதிகளை அடைத்து வைக்கும் வசதி கொண்டது. கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதும் இந்த சிறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறைவான அளவிலேயே கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

தற்போதைய நிலையில் 75 கைதிகள் மட்டுமே இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் தக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபருக்கு திடீரென காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி தென்பட்டன. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக்குள் உள்ள கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அங்கிருந்த கைதிகளையும், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களையும் அச்சமடையச் செய்தது.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் சிறைக்குள் கைதிகளின் அனைத்து அறைகள் மற்றும் சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் சிறைக்குள் இருந்த கைதிகள், சிறை அதிகாரிகள், காவலர்கள் என 115-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியானது. இதில் 18 சிறை கைதிகளுக்கும், ஒரு சிறை காவலருக்கும் என மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கைதிகள் 18 பேரும் சிறைக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக்காவலர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சிறையில் உள்ள மற்ற கைதிகளும், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களும் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Reply