ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 70 சதவீதம் மானியத்தில் சூரிய மோட்டார் பம்புசெட் கலெக்டர் தகவல்..!

இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மையில் நீர்ப்பாசனத்திற்கு தேவையான எரிசக்தியை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013- 2014-ம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புசெட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அமைத்து கொடுத்து வருகிறது.

குமரி மாவட்டத்துக்கு ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கிடும் நோக்கத்தில் 5 எச்.பி., 7.5 எச்.பி., 10 எச்.பி. குதிரைத்திறன் கொண்ட மொத்தம் 243 மோட்டார் நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஏ.சி. மற்றும் டி.சி. மோட்டார் பம்பு செட்டுகளுக்கான விலை நிர்ணயம் செய்தல் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்தல் ஆகியவை மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த விலை என்பது நிறுவுதல், வரிகள், 5 ஆண்டு கால பராமரிப்பு மற்றும் காப்பீடு செலவுகளை உள்ளடக்கியது. இந்த திட்டம் மத்திய மற்றும் தமிழக அரசின் இணைந்த 70 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 30 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்பாகும்.

இத்திட்டத்தின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளவும், இதனை பயன்படுத்திடவும் ஆர்வமுடைய ஆதிதிராவிட விவசாயிகள் செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, நாகர்கோவில் என்ற அலுவலகத்தினை தொலைபேசி எண் 04652 260681, 04652 260181, 04651 291055 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply