மார்த்தாண்டம் பகுதியில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை..!

குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மார்த்தாண்டம் பகுதியில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பேரை இரா. ஹரி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டத்தில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் ஏற்படுகின்றது. இவர்கள் அனைவரும் குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கோணம் கல்லூரியிலும், தக்கலை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவர்களை முறையாக பராமரிக்க வில்லை என்றும் புகார்கள் வருகின்றன. மேலும், கொரோனா சோதனைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் குறிப்பாக கோதையாறு, பேச்சிப்பாறை, அனைமுகம், கொல்லங்கோடு மற்றும் கடலோர பகுதிகளில் இருந்தும் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆனால் கொரோனா சோதனைக்காக வரும் இவர்களுக்கும் இவர்களது குடும்பத்தாருக்கும் முறையான போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மாவட்டத்தில் குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், ரயில் பெட்டி ஆகியவற்றில் அரசு செலவில் காரோனா சோதனை மற்றும் சிகிச்சை மையங்களை நிறுவி அனைவருக்கும் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply