சொத்தவிளை கடற்கரை அருகே 16 வருடமாக ஏங்கி கொண்டிருக்கும் தாய் மற்றும் குடும்பத்தினர்கள் தங்கள் மகனை மீட்டு தர வேண்டி கண்ணீர்

2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் காணாமல் போன தனது மகனுக்காக 16 வருடமாக ஏங்கி கொண்டிருக்கும் தாய் மற்றும் குடும்பத்தினர்கள் தங்கள் மகனை மீட்டு தர வேண்டி கண்ணீர் மல்க காவல் துறைக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரை அருகே அமைந்துள்ள அம்பலபதி என்ற கிராமத்தில் ராஜகோபால் ரஞ்சிதாம் தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஜெய சீலன் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன் ஆவார். கடந்த 2004 ல் சுனாமி ஏற்பட்ட போது அனைத்து கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது.

இதனை வேடிக்கை பார்க்க நண்பர்களுடன் இரு சக்ரக வாகனத்தில் சென்ற ஜெயசீலன் இதுவரை வீடு திரும்பவில்லை. ஜெய சீலனுடன் சென்ற நண்பர்களை விசாரித்த போது, சுனாமி சேதப் பகுதிகளை தாங்கள் பார்த்த கொண்டிருந்த போது ஜெயசீலன் மட்டும் மிகவும் மன வேதனைப் பட்டு கண் கலங்கி அழுததாகவும், சிறிது நேரம் கழித்து தங்களுடன் நின்ற ஜெயசீலன் காணாமல் போக . அந்த பகுதி முழுவதும் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடிய வில்லை.

ஆனால் அவனுடைய இரு சக்ரக வாகனம் மட்டும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகே கிடைத்ததாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயசீலன் குடும்பத்தினர் பல இடங்களில் தங்கள் மகனை தேடியும் கிடைக்காததால் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் பத்திரிக்கைகளில் மகன் புகைப்படத்துடன் காணவில்லை என அங்க அடையாளமாக இடது கை சுண்டு விரலில் காயம் பட்டதில் பாதி மடங்கி காணப்படும் என்றும், நெற்றியில் சிறிய வெட்டு காயம் இருக்கும் என்று விளம்பரம் செய்துள்ளார்கள்.

அதன் மூலமாக பலர் தகவல் அளித்ததன் பேரில் கன்னியாகுமரி, சுவாமிதோப்பு, தூத்துக்குடி, ராமேஸ்வரம், கோவா உள்பட தமிழகத்தில் பல ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஜெயசீலனை நினைத்து அவரது தந்தையான ராஜகோபால், மகன் கிடைக்காத ஏக்கத்தில் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்.

இருப்பினும் ராஜகோபால் மனைவி ரஞ்சிதாம் மற்றும் காணாமல் போன ஜெயசீலனுடன் பிறந்த மற்ற இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து தங்கள் அண்ணனை கடந்த 16 வருடங்களாக தேடி வருகின்றனர். எப்படியும் தங்கள் மகன் கிடைத்து விடுவான் என குடும்பமே கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழக அரசும் காவல் துறையும் தங்கள் மகன் ஜெயசீலனை கண்டுபிடித்து தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply