அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று குமரி வருகை..!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் குமரி மாவட்டத்திற்கு வருகிறார். அவர், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்கிறார். அதோடு கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளை பார்வையிடுகிறார். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள், கொரோனா பரிசோதனைகள் முடிந்து அதன் முடிவுகள் வரும் வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்படும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்ய உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply