பிளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பிளஸ் 2 கடைசி தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதால் அந்த தேர்வு முடிந்த இரண்டு மூன்று நாளில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி தேர்வு எழுதாதவர்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

சில நிமிடங்களில் ரிசல்ட் வெளியானது. இதனால் பிளஸ் 2 மாணவர்கள், பெற்றோர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு முடிவு அவசர அவசரமாக வெளியிட்டது ஏன் என்று புரியவில்லை. தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்கள் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7,79,931 மாணவர்களில் 7,20,209 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.04% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவில் வெற்றி பெற்றுள்ள மாணவ – மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துகள்! விரும்பிய படிப்புகளைத் தேர்வு செய்து முன்னேறிடுக! தேர்ச்சி அடையாதோர் மனம் தளர்ந்திடாமல்; ஊக்கத்துடன் மீண்டும் படித்திடுங்கள். வாழ்க்கை வசப்படும்!” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply