அமைச்சர் நிலோபர் கஃபீலுக்கு கொரோனா தொற்று உறுதி – நலம் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழ்நாட்டில் ஏற்கனவே 3 அமைச்சர்கள் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபீலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உடல்நலம் விசாரித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கஃபிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

நிலோபர் கபில் சமீபத்தில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தார். சில நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் கொரோனா வைரஸ் குறித்து மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். இதனால் அவர் கடந்த 14-ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மருத்துவ பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அவர் மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலோபர் கஃபிலிடம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நலம் விசாரித்தார்.

Leave a Reply