தமிழ் கடவுள் முருகனை விமர்சித்தவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிய வேண்டும்! – பா.ஜ.க தலைவர் முருகன்

கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு, சேத துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக பா.ஜ.க சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில், மாநில தலைவர் முருகன் கலந்துகொண்டு கறுப்பர் கூட்டம் யூடியூப் சானல் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கந்த சஷ்டி கவசத்தின் விளக்கம் என்று ஒரு வீடியோவை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது. இது விளக்கம் இல்லை, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் செயல் என்று இந்து அமைப்புகள், முருக பக்தர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக பா.ஜ.க அறிவித்தது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு பா.ஜ.க தலைவர் முருகன் தன்னுடைய இல்லத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் ஏராளமானோர் பங்கேற்று கருப்பர் கூட்ட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ் கடவுள் முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக விமர்சித்தவர்களை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முருகப் பெருமானின் பக்தர்கள் புண்படும்வகையில் முருகனை இழிவுபடுத்திய யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேந்திர நடராஜன் உள்ளிட்டவர்களை தேச துரோக வழக்கு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்” என்றார். இதைப் போல, பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் தங்கள் வீடுகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Leave a Reply