தொற்று அதிகமானதால் 6 பாதைகள் ‘சீல்’ வைப்பு: நாகர்கோவிலில் இதுவரை 203 பேர் கொரோனாவால் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!

நாகர்கோவிலில் கொரோனா பாதிப்பு குறித்து மாநகர் நல அதிகாரி கிங்சால் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பிளச்சிங் பவுடர் போடப்பட்டு வருகிறது. மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, சளி பாதிப்பு இருக்கிறதா? என விவரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வரை நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 203 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இதில் சிலர் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் நோய் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அருந்ததியர் தெருவில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அப்பகுதி முழுவதும் “சீல்“ வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கிங்சால் கூறினார்.

Leave a Reply