கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்

கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. காங்கிரசாருடன் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். வெள்ளையம்பலம், பிலாங்காவிளை சாலை, மாங்கரை, காட்டுகுழி கம்பிளார் காவுகுளம் சாலை போன்றவற்றை சீரமைக்கும் பணி தொடங்கி பாதியில் நிற்பதாகவும், இந்த சாலை பணிகளை உடனே தொடங்கக்கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

பாதியில் நிற்கும் சாலையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதியடைந்து வருகிறார்கள் என பேரூராட்சி செயல் அலுவலரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார். அப்போது செயல் அலுவலர் இயேசுபாலன், சாலை பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.வுடன், கிள்ளியூர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கிளமெண்ட் பிரேம்குமார், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், கிள்ளியூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அருண்குமார், மாவட்ட துணை தலைவர் பால்மணி, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் வக்கீல் பிரிவு செயலாளர் அருள் ஆனந்த், யூனியன் கவுன்சிலர் விஜயராணி மற்றும் பலர் பங்கு பெற்றனர்.

Leave a Reply