கேரளா தங்க கடத்தல் விவகாரம்… முதல்வர் பினராயி விஜயனை பதவி விலக்கோரும் காங்கிரஸ், பா.ஜ.க.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சரக்கு விமானத்தில் அந்நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தபோது அதில் 30 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. தூதரக பொருட்களுக்கு சோதனையில் விலக்கு இருப்பதால் அதனை பயன்படுத்தி தங்க கடத்தல் கும்பல் கடத்தல் தங்கத்தை அனுப்பியது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில் கேரளா அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக இருந்த ஸ்வப்னா சுரேஷ் இருப்பது தெரியவந்தது.

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் தொண்டர்கள்
இதனையடுத்து தங்க கடத்தல் விவகாரம் கேரளா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு காங்கிரசும், பா.ஜ.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்று முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் அம்மாநிலம் முழுவதும் தனி தனியாக பேரணி நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் 3 லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் முதல்வர் இல்லத்தை நோக்கி சென்றனர். ஆனால் நகரத்தின் நுழைவு இடங்களில் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சென்னிதாலா கூறுகையில், பினராயி விஜயன் தங்க கடத்தல் வழக்கில் சந்தேகப்படும் நபர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார். முதல்வர் அலுவலகம் மற்றும் ஐ.டி. துறையின் நல்ல உறவை ஸ்வப்னா சுரேஷ் நன்றாக அனுபவிக்கிறார். பினராயி விஜயன் உடனடியாக பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கேரளா பா.ஜ.க. தலைவர் கே. சுரேந்திரன் கூறுகையில், தங்க கடத்தலில் ஸ்வப்னா சுரேஷுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தபிறகும் முதல்வர் இன்னும் எந்தவொரு விசாரணைக்கு உத்தரவிடவில்லை. முதல்வருக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் அவர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக பிரதமருக்கு கடிதம் எழுவதை தேர்வு செய்தார், தங்க கடத்தல் மோசடியில் ஈடுபட்டுள்ள தனது நெருங்கிய உதவியாளரின் எந்தவொரு பொறுப்பையும் எடுப்பதில் இருந்து தப்பிப்பது மற்றும கண் துடைப்பு ஆகும் என தெரிவித்தார்.

Leave a Reply