குமரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறி போகும் அவலநிலை : ஆஸ்டின் எம.எல்.ஏ…!

ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறி போகும் அவலநிலை, ஊராட்சி பணிகள் டெண்டர்களில் முறைகேடு, குமரி அரசாங்க அதிகாரிகளை மிரட்டும் டெல்லி பிரதிநிதியின் அதிகார பலம் இப்படி பல்வேறு கோரிக்கை கொண்ட மனு ஒன்று திரு. ஆஸ்டின் எம.எல்.ஏ அவர்கள் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது:-

ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குமரி மாவட்ட ஊராட்சிகளில் 5 கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கு ரூபாய் 50.31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 32 ஊராட்சிகளில் உள்ள 80 கிராமங்களில் 5753 புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்வதற்காக ரூபாய் 4 கோடியே 32 லட்சம் ஒதுக்கீடு செய்து 4-7-2020 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளார்.

32 ஊராட்சிகளில் மேற்கொள்ளவேண்டிய பணியானது 11 பேக்கேஜ்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வளர்ச்சி மூகாம் மூலமாக டெண்டர் விடப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த டெண்டரில் மாவட்ட அளவில் உள்ள பெரிய ஒப்பந்தக்காரர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் பேக்கேஜ் பிரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின் அடிப்படையில் இந்த நிதி நேரடியாக அந்தந்த ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்பப்பட்டு, ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக டெண்டர் விடப்பட்டு தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தந்த ஊராட்சிகளில் பதிவு செய்து இருக்கக்கூடிய உள்ளூர் ஒப்பந்தக்காரர் மூலமாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால் ஒரே இடத்திலே பேக்கேஜ் மூலமாக பெரிய ஒப்பந்தகாரர்கள் பங்குபெறும் வகையில் டெண்டர் முறையை மேற்கொள்வது என்பது,உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்-அமைச்சர் வரைக்கும் கமிஷன் தொகையை மொத்தமாக பெறுவதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியே தவிர வேறொன்றும் இல்லை.இது பஞ்சாயத்து -ராஜ் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர் குலைப்பதோடு மட்டுமல்லாமல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமையை பறிக்கின்ற செயலாகும்.இதுவானது ஊராட்சிகளில் பதிவு செய்திருக்கும் சிறிய ஒப்பந்தக்காரர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களது வயிற்றில் அடிக்கும் செயலாகும்.

இப்பணிகளை அந்தந்த ஊராட்சிகளில் மூலம் டெண்டர் விடப்பட்டு மேற்கொள்ளும் போது தான் பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் இருக்கும்.ஆனால் இத்திட்டத்தின் மூலமாக ஒரே ஒப்பந்தகாரர் பத்துக்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொள்ளும் போது பணிகள் காலதாமதம் ஆவதோடு மட்டும் இன்றி தரமாகவும் இருக்காது.

உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள் முதல் அமைச்சர்கள் வரை தங்கள் சுயலாபத்திற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் இப்படிப்பட்ட செயல்களை மேற்கொள்வதால் பொதுமக்களும், பணிகளும்,பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோல ஊராட்சிகளுக்கான 14வது நிதிக்குழு 2019-20 நிதியாண்டு திட்டத்தில் 35 ஊராட்சிகளுக்கு ரூபாய் 2.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தப் பணிகளும் ஊராட்சி மன்றத்தின் மூலமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும், ஆனால் இதையும் 10 பேக்கேஜ்களாக பெரிய ஒப்பந்தகாரர்கள் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஊரக வளர்ச்சி மூகாம் மூலமாகவே டெண்டர் விடப்படுகிறது.இதுவும் ஊராட்சித் தலைவர்களின் உரிமையை பறிப்பதாகவும், ஊராட்சி அளவில் உள்ள சிறிய ஒப்பந்தகாரர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் உள்ளது.

உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகரான டெல்லி சிறப்பு பிரதிநிதியானவர், மாவட்டத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும்,அரசு உயர் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்தும்- வலியுறுத்தியும்,அதன் மூலம் அனுமதி பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் வளர்ச்சிப் பணிகளை எல்லாம் தானே கொண்டு வந்தது போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ஊராட்சி மன்றதலைவர்கள் மற்றும் சிறிய ஒப்பந்ததாரர்களின் உரிமையை பறிக்கின்ற வகையில் அதிகாரிகளை பயன்படுத்தி செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட டெண்டர் முறையை மேற்கொள்வது என்பது கமிஷன் என்ற ஒரே நோக்கத்திற்காக தவிர வேறொன்றும் இல்லை. இது கண்டனத்திற்குரியது.

ஆனால் டெல்லி சிறப்பு பிரதிநிதியானவர் அவரது பதவியின் பணியை முறையாக செய்யாமல்,ஏதோ தமிழக அரசினுடைய கன்னியாகுமரி சிறப்பு பிரதிநிதியாக தன்னை நினைத்துக்கொண்டு அதிகாரிகளை மிரட்டி, அழுத்தம் கொடுத்து, இப்படிப்பட்ட செயல்களை செய்ய வைக்கிறார்.

எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இப்படிப்பட்ட மிரட்டலுக்கும்,அழுத்தத்திற்கும்,இடம் கொடுக்காமல் நியாயமான முறையில் பஞ்சாயத்து-ராஜ் சட்டப்படி ஊராட்சிகளுக்கு உரிய அதிகாரம் வழங்கும் வகையில், ஊராட்சித் தலைவர்கள் மூலமாக இப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கு ஆணை வழங்குமாறு ஆஸ்டின் எம.எல்.ஏ கேட்டுக்கொண்டார்.

Leave a Reply