ஈரானில் இருந்து குமரி வந்த 535 மீனவர்கள் இன்று வீடு திரும்பினார்…!

ஈரான் நாட்டிலிருந்து குமரி மாவட்டத்தை சார்ந்த 535 மீனவர்கள் கப்பல் மூலம், ஜூலை 1-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்கள். அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட 535 மீனவர்களில், கன்னியாகுமரி தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் 210 மீனவர்களும், கடியப்பட்டணம் – புனித ஜாண்ஸ் கல்லூரியில் 56 மீனவர்களும், வெள்ளமோடி – உதயா கல்லூரியில் 117 மீனவர்களும், தூத்தூர் – புனித யூதா கல்லூரியில் 39 மீனவர்களும், தொலையாவட்டம் – அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் 47 மீனவர்களும், அதங்கோடு நாராயணகுரு சித்தார்தா பொறியியல் கல்லூரியில் 66 மீனவர்களும் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 7 நாட்கள் நிறுவன தனிமைப்பட்டிருந்தார்கள்.

7 நாட்கள் கழித்து இரண்டாவது பரிசோதனை முடிந்து, அதற்கான பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு, இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள், தோவாளை சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் தனிமைப்டுத்தப்பட்டிருந்த, 210 மீனவர்களுக்கு, தலா ரூ.1000 -மும், 5 கிலோ அரிசியும், இன்று வழங்கி, தெரிவித்ததாவது :-

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து, ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கொரோனா தொற்று காரணமாக, சொந்த ஊருக்கு திரும்பி வர இயலாமல், ஈரான் நாட்டில் தங்கியிருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் பல்வேறு நடவடிக்கைகளின்மூலம், மீனவர்களை சொந்த ஊருக்கு கப்பல்மூலம் ஜூலை 1-ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு, அவர்களை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அழைத்துவந்து, கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, 6 மையங்களில் 7 நாட்கள் நிறுவன தனிமைப்பட்டிருந்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட 7 நாட்களும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு இரண்டாவது பரிசோதனை மேற்கொண்டு, அனைவரது பரிசோதனை முடிவுகள் வந்தபின், மீனவர்கள் இன்று, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

மேலும், சொந்த ஊருக்கு செல்லும் மீனவர்கள் அனைவரும், ஈரான் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வர எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டீர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மீனவர்கள் தங்களது நலன் கருதியும், தங்கள் குடும்பத்தினர்களின் நலன்கருதியும், இன்னும் 7 நாட்கள் வீடுகளில் தங்களை தனிமைபடுத்திக்கொள்ள
வேண்டும்.

எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல வேண்டாம். தமிழ்நாடு அரசு கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, மாவட்ட நிர்வாகத்திற்கும், அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது கொரோனா
தொற்று இல்லை என்ற அறிகுறியோடு வீட்டுக்கு சென்றபின், உங்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட ஏதாவது அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் தெரிவித்தார்கள். ஈரான் நாட்டிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த மீனவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அழைத்து வந்து, அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தந்தமைக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம்
அவர்களுக்கும், மீனவர்கள் சார்பாக, மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன் அவர்கள், கடியப்பட்டணம் புனித ஜாண்ஸ் கல்லூரியில் 56 மீனவர்களும், வெள்ளமோடி உதயா கல்லூரியில் 117 மீனவர்களும் என 173 மீனவர்களுக்கும், மாவட்ட அரசு இரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் திரு.டி.ஜாண் தங்கம் அவர்கள், தூத்தூர் – புனித யூதா கல்லூரியில் 39 மீனவர்களும், தொலையாவட்டம் – அன்னை வேளாங்கண்ணி
கல்லூரியில் 47 மீனவர்களும், அதங்கோடு நாராயணகுரு சித்தார்தா பொறியியல் கல்லூரியில் 66 மீனவர்களும் என 152 மீனவர்களுக்கும், தலா ரூ.1000 -மும், 5 கிலோ அரிசியும் இன்று வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியப்பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் திரு.எம்.சேவியர் மனோகரன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் திருமதி.இ.சாந்தினி பகவதியப்பன் (தோவாளை), திரு.எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), துணை இயக்குநர்
(மீன்வளத்துறை) திரு.த.இளம்வழுதி, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் பங்குதந்தை அருட்திரு.எஸ்.ஸ்டீபன், பள்ளம் பங்குதந்தை அருட்திரு.சூசை ஆன்றனி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply