குமரி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்க கேட்டு கேரள முதல்-மந்திரியை சந்திக்க முடிவு:வசந்தகுமார் எம்.பி..!

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து மீன்பிடிப்பது வழக்கம். தற்போது மீன்பிடி தடை காலம் ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலால் கேரள அரசு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் கேரளாவுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழுமம் இயக்குனர் ஸ்டீபனை, குமரி மாவட்ட எம்.பி. வசந்தகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் நேற்று மாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிவடைந்த பின்னர் நிருபர்களுக்கு எச்.வசந்தகுமார் எம்.பி. கூறியதாவது:-

குமரி மேற்கு மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் ஜூலை 31-ந் தேதி வரை உள்ளது. குமரி மேற்கு மாவட்ட மீனவர்கள் கேரளாவை மையமாகக் கொண்டு மீன் பிடிப்பது வழக்கம். கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டு உள்ளது.

மேலும் குமரி மாவட்ட மீனவர்கள் கேரளாவில் வந்து மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த தடை உத்தரவை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும். இது தொடர்பாக கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஈரானில் தவித்த மீனவர்களை மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தேன். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர தி.மு.க., காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து பேசி, கோரிக்கையும் வைத்தேன்.

மீனவர்களை மீட்பது தொடர்பாக நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு ஈரானில் இருந்து மீனவர்களை கப்பல் மூலம் மீட்டு கொண்டு வந்தனர். அங்கு சிக்கி தவிக்கும் 64 மீனவர்களை மீட்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு எச்.வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

Leave a Reply