குமரியில் 36 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ஆஸ்டின் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் மீது வழக்கு

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்க வலியுறுத்தி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி

அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மருங்கூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையிலும், அதேபோன்று மயிலாடியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம் தலைமையிலும், அஞ்சுகிராமத்தில் தி.மு.க. பேரூர் செயலாளர் இளங்கோ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கொட்டாரம் சந்திப்பில் காமராஜர் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தாமரைபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, தொண்டர் அணி முன்னாள் மாநில துணை அமைப்பாளர் பாலஜனாதிபதி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் யோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி நகர தி.மு.க. சார்பில் சர்ச் ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ஜெஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, வக்கீல் பால ஜனாதிபதி, பார்த்தசாரதி, பூவியூர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தோவாளை ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆரல்வாய்மொழியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாரூக், பொருளாளர் ஜார்ஜ், பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் வடசேரி அண்ணா சிலை அருகே, ராமன்புதூர், பீச்ரோடு, பறக்கை ரோடு சந்திப்பு, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், குளச்சல், மணவாளக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மருங்கூரில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் மீதும், மயிலாடியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. சாய்ராம் உள்பட 20 பேர் மீதும், அஞ்சுகிராமத்தில் இளங்கோ உள்பட 25 பேர் மீதும் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply