மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸின் பாதிப்பு மிகவும் குறைந்து கொண்டே வந்ததால் மிக விரைவில் கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கேரளா மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் திடீரென அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்புவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளாதாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது

மேலும் மாநிலத்திற்குள் செல்வதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் ஜாக்ரதா இ-சேவையில் தங்களை பதிவு செய்து கொண்டு வர வேண்டும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்த அளவு நபர்கள் மட்டுமே அனுமதிப்படுவார்கள் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் இன்று முதல் கடுமையான முழு ஊரடங்கு அங்கு அமலுக்கு வருகிறது. திருவனந்தபுரத்தில் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருந்து கடைகள், மளிகை கடைகள், காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே திருவனந்தபுரம் மாநகராட்சி அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் தலைமைச் செயலகம், அரசு அலுவலங்கள், நீதிமன்றம் உட்பட அனைத்தும் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply