செல்வ மகள் சேமிப்புத் திட்டம்: பெற்றோர்களுக்கு அரிய வாய்ப்பு!

கொரோனா ஊரடங்கை கருத்தில் கொண்டு செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் இணைவதற்கு மத்திய அரசு சலுகை அறிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை இந்திய தபால் துறை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலர்களோ அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். இந்த சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 1,000 ரூபாயும், அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்ய முடியும்.

மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வரும் இத்திட்டத்தில் கொரோனா காலத்தில் கணக்கு தொடங்குவது சிரமமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கு காலத்தில் 10 வயதைப் பூர்த்தி செய்த குழந்தைகளுக்கு இம்மாதம் 31ஆம் தேதி வரையில் கணக்கு தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2020 மார்ச் 25 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 10 வயதை அடைந்த குழந்தைகளுக்கு ஜூலை 31 வரையில் கணக்கு தொடங்கு அனுமதி வழங்கப்படுகிறது.

ஊரடங்கு காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள இந்த மூன்று மாத சலுகை அறிவிப்பு பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்துக்கான தற்போதைய வட்டி விகிதம் 7.6 சதவீதமாக உள்ளது. இத்திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கை 21 ஆண்டுகளில் முடித்துக்கொள்ளலாம். இந்த வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலமாகவும் பணத்தை டெபாசிட் செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

Leave a Reply