ஈரான் நாட்டில் தவிக்கும் 63 மீனவர்களை மீட்க வேண்டும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த 745 மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு ஈரான் நாட்டுக்கு சென்றனர். இதில் 562 மீனவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈரான் நாட்டில் உள்ள ஒரு தீவில் உண்ண உணவு இன்றியும், குடிநீர் கிடைக்காமலும், கடந்த 4 மாதங்களாக தவித்து வந்தனர். இவர்களை மீட்டு சொந்த ஊர் கொண்டு வரும்படி சட்டமன்றத்தில் வலியுறுத்தியும், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். அதைத்தொடர்ந்து 682 மீனவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்களுடன் இருந்த 63 மீனவர்கள் கப்பலில் இடமில்லாததால் அழைத்து வரப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 44 மீனவர்களும் அடங்குவர். எனவே ஈரானில் தவிக்கும் 63 மீனவர்களையும் அரசு செலவில் தனி விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply