சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்: கன்னியாகுமரியில் அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை

சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை நடந்தது. இதில் பெண்கள் கலந்து கொண்டனர்.

வீரத்துறவி என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி மகாசமாதி அடைந்தார். அவரது 119-வது மகாசமாதி அடைந்த தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ஏக்நாத் அரங்கத்தில் அன்னபூஜை நடந்தது.

இதை யொட்டி காலை 10 மணிக்கு கேந்திர ஊழியர்களின் பிரார்த்தனையும், அதைத் தொடர்ந்து நெல்லை, குமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்டத் தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை நடந்தது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர அகில இந்திய பொருளாளர் அனுமந்தராவ் குத்துவிளக்கு ஏற்றி அன்னபூஜையை தொடங்கி வைத்தார். கணக்காளர் நாகலெட்சுமி வரவேற்றார். கிராம முன்னேற்றத் திட்ட செயலாளர் அய்யப்பன் அன்னபூஜை பற்றி பேசினார். அகில இந்திய துணைத்தலைவர் பால கிருஷ்ணன், மூத்த ஆயுட்கால தொண்டர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் ஆசியுரை வழங்கினார்கள். கேந்திர ஊழியர் லீலா அன்ன பூர்ணாஸ்தோத்திரம் பாடினார். கேந்திர ஊழியர் ரெஜினா பகவத்கீதை மற்றும் விசுவரூபதரிசனம் பற்றி பேசினார். அதைத் தொடர்ந்து ஆரத்தி எடுக்கப்பட்டது. விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட நெல்லை மாவட்ட பொறுப்பாளர் ஜானகிபுஷ்பம், சண்முகபாரதி, ரெஜினாள் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் கிராம முன்னேற்றத் திட்ட தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் பரமகுரு நன்றி கூறினார்.

இதில் கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீபத்மநாபன், இயற்கை வள அபிவிருத்தி திட்ட செயலாளர் வாசுதேவ், கேந்திர வளாக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.

Leave a Reply