சாத்தான்குளம் வழக்கு: தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்

சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி பிரகாஷ் அவர்கள் தாமாகவே முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வழக்கை விசாரித்தார்

இந்த வழக்கில் அவர் பிறப்பித்த அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சிபிஐ விசாரிக்கும் வரை பொறுமை காக்காமல் இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரிக்கலாம் என்றும் உடனே விசாரணையை தொடங்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில்தான் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்து கைதுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டதும் இதே நீதிபதிதான்.

இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க காரணமாக இருந்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி பிரகாஷ் அவர்கள் திடீரென சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 3 மாதத்துக்கு ஒரு முறை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து சுழற்சி முறையில் நீதிபதிகள் மாற்றம் செய்வது வழக்கம் என்பதால் அதன் அடிப்படையில் நீதிபதி பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply