சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி…! 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை

திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சாத்தான்குளம் இரட்டை மரணத்தில் உயர்நீதிமன்ற மதுரை உத்தரவின் பேரில், சிபிசிஐடி போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ்  ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந் நிலையில்,  திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு  தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற நடவடிக்கைகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆப் போலீசை அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.

Leave a Reply