குமரியில் முழு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை

குமரியில் இன்று நடைபெறும் முழு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மார்ச் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்குகளை அறிவித்தாலும், அதில் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது.6-வது கட்ட ஊரடங்கில் இந்த மாதம் (ஜூலை) 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்ட போது, குமரி மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் தவிர்க்க முடியாத காரணங்கள் இல்லாமல் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே நடமாடக்கூடாது. அப்படி யாராவது ஊரடங்கை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டும் அல்லாமல் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

இதுதவிர முழு ஊரடங்கை மீறி வியாபாரம் செய்யும் வணிக நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply