ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் : நெகிழ்ச்சியில் தமிழிசை

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டது. இந்த தாக்குதலில் சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்தது.

இந்த திடீர் தாக்குதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதன் எதிரொலியாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பதற்றம் நிலவும் லடாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

லடாக்கில் வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. இந்திய ராணுவ வீரர்களின் மனஉறுதி மலையை போல பலமாக இருக்கிறது . இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள் .அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், படைமாட்சி என்ற அதிகாரத்திலுள்ள,

‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்,
எனநான்கே ஏமம் படைக்கு’

என்ற திருக்குறளை குறிப்பிட்டு வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கையை பெறுதல் ஆகிய நான்கும் படை வீரனுக்கு தேவையான பண்புகள் என திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், ” தமிழ் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை லடாக்கில் உள்ள வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசியதற்கு நன்றி. தாய் இந்தியாவைக் காக்க தைரியமாக தோளோடு தோளோடு நிற்கும் தலைவரின் துணிச்சலான இதயங்களுக்கு மத்தியில் திருக்குறள்” என்று அவர்நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply