சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடார் மகாஜன சங்கத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு

நாகர்கோவிலில் காமராஜர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தில் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடார் மகாஜன சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் உள்ள காமராஜர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்தும், சிலையை உடைத்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் சுரேந்திரகுமார், பழவிளை காமராஜர் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், பனங்காட்டுப்படை கட்சி மாநில ஆலோசகர் பாலசிவனேசன், குமரி மாவட்ட இளைஞரணி தலைவர் விமல், தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க நிறுவன தலைவர் ரெஜிசிங், மாநில தொண்டரணி தலைவர் ராஜன் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள், நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை சந்திப்பில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை சமூக விரோதிகள் கடந்த 1-ந் தேதி மாலை சேதப்படுத்தியுள்ளனர். அவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply