குமரியில் 516 இடங்களில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கக்கூடாது என வலியுறுத்தி 516 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொழிலாளர் சட்டங்களை நீக்கும் நடவடிக்கை, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது, மின்சார திருத்த மசோதா, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றை கைவிட வேண்டும்.

கொரோனாவால் இறந்த அரசு பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ், ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன், எச்.எம்.எஸ். மாநில தலைவர் சுப்பிரமணியபிள்ளை, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி இசக்கிமுத்து, எல்.பி.எப். மாநில துணைச்செயலாளர் இளங்கோ, எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் விவேகானந்தன், மீன்சங்க மாநில சம்மேளன பொதுச்செயலாளர் அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் தொ.மு.ச. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். எம்.ஜே.ராஜன், தொ.மு.ச. நிர்வாகி ஜலீல், நிர்வாகிகள் வெங்கடாசலம், ரமேஷ் முகமது மைதீன், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் 516 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Leave a Reply