சாத்தான்குளம் சம்பவம் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம்…எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது பொன்.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதிகளுக்காக இந்தியாவில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராகக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் வேண்டுகோள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

சாத்தான்குளம் சம்பவத்தில் வியாபாரிகளை காவல்நிலையத்தில் வைத்து இரவு 2 மணி வரை தாக்குதல் நடத்திய காவலர்கள் மிருகங்கள் கூட செய்ய தயங்கும் செயலை செய்துள்ளதாகவும். கொரோனா காலம் தொடங்கியது முதல் காவல்துறை தலைவர் முதல் அடிமட்ட காவலர் வரை வீதிகளில் நின்று பணியாற்றினர், தங்கள் குடும்பத்தை மறந்து பணியாற்றிய காவலர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நற்பெயரை ஏற்படுத்தி இருந்தனர்.

ஆனால் அந்த நற்பெயருக்கு கரும்புள்ளி வைத்தது போன்று சாத்தான்குளம் சம்பவம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், அரசின் கீழ் இருக்கும் துறை என்று எண்ணாமல் தனி அதிகாரம் படைத்தவர்களாக சாத்தான்குளம் காவலர்கள் செயல்பட்டு உள்ளதாகவும் சாத்தான்குளம் காவல்நிலையம் ஒரு தாதாவின் அலுவலகமாக செயல்பட்டு உள்ளதாகவும் இதனால் ஒட்டுமொத்த காவல்துறையின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தினர் திட்டமிட்டு செயல்பட்டு உள்ளதாகவும் குற்றஞ்சாடடினார்.

இந்த வழக்கு முடிக்கப்படும் போது நாடு எதிர்பார்ப்பது கொலை குற்றத்திற்கான உச்ச பட்ச தண்டனை மட்டுமே என்றும் சாத்தான்குளம் சம்பவ அதிர்ச்சி முடியும் முன்பே 7 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி நீதிமன்ற தண்டனைகள் கடுமையாக ஆக்கப்பட வேண்டும் என்றும் இரண்டு வழக்குகளிலும் மரணதண்டனை வழங்க வில்லை என்றால் குற்றவாளிகள் உற்சாகம் அடைந்து விடுவார்கள் எனறார்.

மேலும் சாத்தான்குளம் மற்றும் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக கூடாது என வேண்டுகோள் விடுதத அவர், ஒரு மிருக்கத்திற்கு இருக்கும் அறிவு கூட சாத்தான்குளம் சம்பவம் மற்றும் சிறுமியை பாலியல் கொலை செய்தவர்களுக்கு இல்லை என குற்றஞ்சாட்டினார்.

செய்தியாளர்களை சந்திந்த போது குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் உமாரதி ராஜன், முன்னாள் நகர்மன்றத் தலைவி மீனாதேவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply