முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தான்குளம் செல்கிறார்!

தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முத்து ராஜ், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சாத்தான்குளம் செல்கிறார். தந்தை – மகனை இழந்த குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி குடும்பத்தில் ஒருவருக்கு அறிவித்த அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதல்வர் வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்திருந்தனர். அதன் படி நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜு சாத்தான்குளத்துக்கு சென்று ஜெயராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் ரூ.25 லட்சம் நிதியுதவிக்கான காசோலையையும் வழங்கினார்.

Leave a Reply