மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த போலீஸ் அதிகாரிகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும், மகனும் போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தானாக முன்வந்து வழக்காக கோப்பில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்பேரில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார். அவருடைய விசாரணைக்கு போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. மேலும், மாஜிஸ்திரேட்டை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டு நுழைவு வாயில் முன்பு வக்கீல்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் உதயகுமார், சிதம்பரதாணு பிள்ளை, மரிய ஸ்டீபன், மகேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

Leave a Reply