பெண்ணின் நகையை கொடுக்க மறுப்பு: எம்.பி., எம்.எல்.ஏ. வங்கியில் உள்ளிருப்பு போராட்டம் நித்திரவிளை பகுதியில் பரபரப்பு

குமரி மாவட்டம் வாவறை பகுதியைச் சேர்ந்தவர் பால் தங்கம் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளார். நடைக்காவில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பால் தங்கம் கடந்த ஓராண்டுக்கு முன் ரூ.1 லட்சம், கடந்த மே மாதம் ரூ. 81 ஆயிரத்துக்கும் நகையை அடகு வைத்து பணம் பெற்றார்.

அந்த கடனுக்கான அசல் மற்றும் வட்டியை நேற்று வங்கியில் செலுத்தி உள்ளார். ஆனால் வங்கி சார்பில் நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. அதாவது, சுயஉதவிக்குழு மூலம் ரூ.4.75 லட்சத்துக்கு லோன் எடுத்திருந்ததாகவும், அதை செலுத்தாததால் நகையை தர முடியாது என்றும் வங்கி அதிகாரி தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வசந்தகுமார் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வங்கிக்கு வந்து மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து அவர்கள் வங்கியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் லூயிஸ், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் பால்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ஜார்ஜ் ராபின்சன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், நடைக்காவு பஞ்சாயத்து தலைவர் கிறிஸ்டல் ஜாண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 8 மணி வரை நீடித்தது. அப்போது நகையை திரும்ப கொடுப்பதாக வங்கி அதிகாரி உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

பெண்ணின் நகையை திருப்பி வழங்காததை கண்டித்து வங்கியில் நடந்த உள்ளிருப்பு போராட்டம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply