ஈரானில் தவித்த 550 மீனவர்கள் இன்று குமரி வருகை 6 கல்லூரிகளில் தங்க வைக்க ஏற்பாடு

ஈரானில் தவித்த 550 மீனவர்கள் இன்று (புதன்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்கள். அவர்கள் குமரி மாவட்டத்தில் 6 கல்லூரிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈரான் நாட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதில் இருந்து விமானம் மற்றும் கப்பல் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதனால் ஈரான் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் இந்தியா திரும்ப முடியாமலும், அங்கு தொழிலில் ஈடுபட முடியாமலும் பரிதவித்தனர். இதேபோல தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் ஈரானில் இருந்து ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியின்பேரில் ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 550 மீனவர்கள் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் கடந்த மாதம் இறுதியில் கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு புறப்பட்டனர். அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேருகிறார்கள்.

பின்னர் அவர்களுக்கு துறைமுகத்திலேயே கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 550 பேரும் குமரிக்கு பஸ்கள் மூலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஈரானில் சிக்கி தவித்த மீனவர்கள் 540-க்கும் மேற்பட்டோர் நாளை (அதாவது இன்று) காலை கப்பல் மூலமாக தூத்துக்குடி வந்து சேருகிறார்கள். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து குமரிக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்கள். மதியத்துக்குள் குமரி வந்து சேருவார்கள்.

அவர்களை அழைத்துவர குமரியில் இருந்து 18 அரசு பஸ்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த பஸ்களில் அவர்களை குமரிக்கு அழைத்து வந்ததும் தூத்தூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 6 கல்லூரிகளில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட இருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

Leave a Reply