நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு வேளையிலும் மனு அளிக்க திரளும் மக்கள்

கொரோனா ஊரடங்கு வேளையிலும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனுக்களுடன் திரளுவது அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்குகாரணமாக மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்டவை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து நடைபெறவில்லை. இருப்பினும் பொதுமக்கள் பலர் பல் வேறு கோரிக்கை மனுக்களுடன் அரசுதுறை அலுவலகங்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

மேலும் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி பெறுதல்,அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல இ-பாஸ்க்கு விண்ணப் பித்து அது கிடைக்காததால் அதற்காக மேல் முறையீடு செய்தல் போன்றவற்றுக்கு கலெக்டர் அலுவலகம் வந்து விண்ணப்பிக்கின்றனர். இவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மனுக்கள் அளிக்கின்றனர். இதனை போன்று கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மக்கள் பலரும் மனுக்களுடன் நிவாரணம் கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வருகின்றனர்.

இவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் யாரும் முன்வராத போதிலும் அங்கு மனுக்கள் சேகரிப்பதற்காக வைக்கப்படுகின்ற பெட்டியில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். பெட்டியில் போடப்படுகின்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply