தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார்

இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை செய்யவில்லை என மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமிருக்கும் பகுதியில் மட்டும் ஊரடங்கு அல்லது தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் எனவும் தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லாமல் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அடங்கி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply