டெண்டர் விடப்பட்ட ரூ.7¾ கோடி சாலை பணிகளை தொடங்க வேண்டும் ஆஸ்டின் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கன்னியாகுமரி தொகுதியில் டெண்டர் விடப்பட்ட ரூ.7¾ கோடி சாலை பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்ட பேரூராட்சிகளில் 19 சாலை பணிகளுக்கு 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 19 சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

2-வது கட்டமாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் 19 சாலைகள் தேர்வு செய்து பேரூராட்சிகளின் இயக்குனர், உதவி இயக்குனர் மற்றும் செயல் அலுவலருக்கு நான் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் தென்தாமரைகுளம் பேரூராட்சி தாமரைகுளம் பள்ளிக்கூடத்தில் இருந்து கோட்டையடி சானல்கரை செல்லும் சாலை சீரமைக்க ரூ.45 லட்சமும், பூதப்பாண்டி பேரூராட்சி சாட்டுபுதூர் சாலையில் பேவர்பிளாக் அமைக்க ரூ.50 லட்சம், தெங்கம்புதூர் பேரூராட்சி ஒத்தக்கடை-குஞ்சன்விளை ஆற்றன்கரை சாலைக்கு ரூ.40 லட்சம்,

அஞ்சுகிராமம் மேட்டுக்குடியிருப்பு-ரஸ்தாக்காடு சாலைக்கு ரூ.45 லட்சம், கொட்டாரம் பேரூராட்சி லெட்சுமிபுரம்-பாலகிருஷ்ணாநகர் சாலைக்கு ரூ.44 லட்சம், மையிலாடி பேரூராட்சி பெருமாள்புரம்-லெட்சுமிபுரம் சாலைக்கு 40 லட்சம், அழகியபாண்டியபுரம் பேரூராட்சி மேல்கரை அரசு தொடக்கப்பள்ளி சாலை, எஸ்.வி.எம். மண்டபம் பின்னால் செல்லும் சாலை ரூ.30 லட்சம், அழகியபாண்டியபுரம் கனரா வங்கியில் இருந்து கிராமம் செல்லும் சாலைக்கு ரூ.25 லட்சம், ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் எம்.ஜி.ஆர்.நகர் தெரு சாலைக்கு ரூ.50 லட்சம், குருசடி கிழக்கு தெரு சாலைக்கு ரூ.45 லட்சம், கன்னியாகுமரி பேரூராட்சி சின்னமுட்டம் துறைமுகம் சாலைக்கு ரூ.37 லட்சம், பில்லர் ஆஸ்பத்திரி சாலைக்கு ரூ.40 லட்சம், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி சுக்குப்பாறை தேரிவிளை குடிநீர் தொட்டி – கல்லூரி செல்லும் சாலைக்கு ரூ.33 லட்சம்,

அழகப்பபுரம் பேரூராட்சி தெப்பகுளம்- இந்திராநகர் சாலைக்கு ரூ.45 லட்சம், சுசீந்திரம் பேரூராட்சி காக்கமூர் சாலைக்கு ரூ.50 லட்சம், தேரூர் பேரூராட்சி புதுக்கிராமம்-குறண்டி சாலைக்கு ரூ.35 லட்சம், தாழக்குடி பேரூராட்சி பனக்கரை சாலைக்கு ரூ.35 லட்சம், மருங்கூர் பேரூராட்சி அமராவதிவிளை-ஸ்ரீகிருஷ்ணாபுரம்- ராமனாதிச்சன்புதூர் சாலைக்கு ரூ.40 லட்சம், புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை கடற்கரை சாலைக்கு ரூ.50 லட்சம் என 19 சாலை பணிகளுக்கு ரூ.7 கோடியே 79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு கடந்த 22-ந்தேதி டெண்டர் விடப்பட்டுள்ளது.

டெண்டர் விடப்பட்டு ஒரு வார காலத்துக்கு மேலாகியும் இன்னும் ஒப்பந்தக்காரர் நிர்ணயம் செய்யப்படவில்லை. டெண்டர் நடைமுறைப்படி யார் குறைந்த தொகைக்கு ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கிறார்களோ? அவர்களுக்கு தான் பணி ஆணை வழங்கப்பட வேண்டும். ஆனால் கூடுதல் தொகைக்கு ஒப்பந்தபுள்ளி கோரியவர்களுக்கும் குறைந்த தொகைக்கு ஒப்பந்தபுள்ளி கோரியவர்களுக்கும் இடையே கட்டப்பஞ்சாயத்து பேசி வருவதால் ஒப்பந்தக்காரர் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. மேற்படி, சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்களும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. உடனடியாக ஒப்பந்தக்காரர்களை முடிவு செய்தால் தான் அவர்கள் பெயரில் பணி மற்றும் ஒப்பந்த ஆணை வழங்கி பணிகளை தொடர முடியும்.

எனவே, ஒப்பந்த புள்ளி கோரிய ஒப்பந்ததாரர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கி பணிகளை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Reply