லாக்கப் மரணங்கள் : சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.! கனிமொழி எம்பி கருத்து.!!

தொடரும் லாக்கப் மரணங்களை தடுக்க சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்,சட்டத்தில் மக்களை பாதுகாக்க கூடிய விஷயங்களைத் தாண்டி, தான் நினைத்த மாதிரி எதை வேண்டுமென்றாலும் நடத்திடலாம் என்ற நிலை மாற வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தினைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேசமூர்த்தி, கடந்த வாரம் சனிக்கிழமை மதுபோதையில் கீழே விழுந்தவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கணேசமூர்த்தி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது சாவிற்கு உளவுத்துறை காவலர் கார்த்திக் தான் காரணம் என்று கடிதமும் எழுதி வைத்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து கணேசமூர்த்தி உடலைப் பெற்று தகனம் செய்தனர். இந்நிலையில் கணேசமூர்த்தி வீட்டிற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று அவரது மனைவி ராமலட்சுமி , தாய் தனலெட்சுமி மற்றும் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். அவருடன் திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்பி கூறுகையில் இது தனியாக எங்கும் நடக்கிற விஷயம் கிடையாது, தொடர்ந்து பலபேர் தாக்கப்படுகின்றனர்,மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர், லாக்கப்பில் மரணமடைய கூடிய நிலையும் ஏற்படுகிறது. இது எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், சட்டங்கள் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். சட்டத்தில் மக்களை பாதுகாக்க கூடிய விஷயங்களைத் தாண்டி, தான் நினைத்த மாதிரி எதை வேண்டுமென்றாலும் நடத்திடலாம் என்ற நிலை மாற வேண்டும். இது ரொம்ப முக்கியம் என்றார்.

Leave a Reply