பா.ம.கவுக்கு முக்கியத்துவம்; கண்டுகொள்ளப்படாத தே.மு.தி.க!- அ.தி.மு.கவுக்கு எதிராக விஜயகாந்த் சீறிய பின்னணி

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “பா.ம.கவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை” என்று குமுறுகிறது தேமுதிக.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டும் நிலையில், வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் முதல் முதல்வர் வரை கடுமையாக வேலை கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர், “கொரோனாவை கட்டுப்படுத்த ஆண்டவனால் தான் முடியும்” என பதில் அளிக்க, அதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள தே.மு.தி.க விமர்சனம் அரசை திடீரென விமர்சனம் செய்ய என்ன காரணம்?

விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது மட்டும் ஒரு தீர்வாகாது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பதை போன்று, தற்போது கொரோனா பரவலைத் தடுக்க, தமிழக அரசு வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடத்த வேண்டும். மேலும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுரக் குடிநீர் உள்ளிட்ட “ப்ரோபைலக்டிக்” மருந்துகள் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும். நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி வீடு வீடாக சென்று மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என தமிழக அரசால் சொல்ல முடியாது. ஏனெனில் ஆயுஷ் திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதனை பயன்படுத்துங்கள்” என்று அதிமுக அரசை விமர்சனம் செய்ய சூசகமான வார்த்தையை பயன்படுத்தியிருந்தார் விஜயகாந்த். இதில்தான் கூட்டணிக்குள் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து தே.மு.தி.க நிர்வாகிகளிடம் பேசியபோது, “அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க நீடிக்குமா என்கிற சந்தேகம் கொஞ்சம் நாட்களாக எழத்தொடங்கியுள்ளது. காரணம் ராஜ்ய சபா விவகாரத்திலிருந்து இன்றுவரையிலும் அவர்களது பேச்சிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சீட் கிடைக்காத விரக்தியில் ஆளும்கட்சியை தேமுதிக கடுமையாக விமர்சனம் செய்தது.இது ஆளும்கட்சியினர் ரசிக்கவில்லை. பின்பு அதிமுகவில் நால்வர் அணியில் உள்ள ஒருவர் மூலமாக தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் கூட்டணி தர்மத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்னை என்னவென்று எங்களிடம் சொல்லுங்கள். பொது வெளியில் பேசாதீர்கள். இது பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகிவிடும் என்று பேச, அந்த நபரிடம் தேமுதிகவின் மனக்குமுறலை கொட்டி தீர்த்திருக்கிறது தலைமை. இதற்கு நல்ல முடிவு விரைவில் வரும் என்று சொல்லிவிட்டு சென்றவர் இன்றுவரையிலும் ஆளுங்கட்சி தரப்பில் எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை” என்றனர்.

பாமகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமக்கு இல்லை என்ற வருத்தம் நீண்டகாலமாக தேமுதிவிற்கு இருந்து வருகிறது. ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த தேமுதிக சமீபகாலமாக அமைதியாக இருந்துவந்தன. தற்பொழுது மீண்டும் ஆளும்கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கியிருப்பது கூட்டணிக்குள் இருக்கும் விரிசலையே இது காட்டுகிறது.

Leave a Reply