செஞ்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தானுக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 51,699பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கொரோனா காலகட்டத்தில் களப்பணியில் ஈடுப்பட்டு வந்த திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 ஆம் தேதி உயிரிழந்தார் . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.அரசுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply