கேட்டது பிரியாணி; வாங்கிக் கொடுத்தது குஸ்கா!கணவரை மிரட்ட மனைவி எடுத்த விபரீத முடிவு

வருமானம் இல்லாமல் தவித்த கணவர், பிரியாணி கேட்ட மனைவிக்கு குஸ்கா வாங்கிக் கொடுத்துள்ளார். கணவரை மிரட்ட தீக்குளித்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் மாமல்லபுரத்தில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (34). இவரது மனைவி செளமியா (29). காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு 11 வயதில் மகளும், 9 வயதில் மகனும் இருக்கின்றனர். மனோகரன், மாமல்லபுரத்தில் சிற்பக் கலைக்கூடத்தில் பணிபுரிந்து வருகிறார். செளமியா நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 25ம் தேதி பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர், 150 ரூபாய் கொடுத்து தங்களுக்குப் பிரியாணி வாங்கித் தந்து உதவும் படி மனோகரனிடம் கேட்டுள்ளார். அப்போது, மனைவி செளமியா, எனக்கும் குழந்தைக்கும் பிரியாணி வாங்கித் தரும்படி கணவரிடம் கேட்டுள்ளார்.

அப்போது, மனோகரன், ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். பிரியாணி வாங்க என்னிடம் பணமில்லை என்று கூறிவிட்டு சென்றதோடு, பக்கத்து வீட்டுக்காரருக்கு பிரியாணி வாங்கி வந்து கொடுத்துள்ளார் மனோகரன். குழந்தைகளுக்கு குஸ்கா வாங்கி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து பிள்ளைகளுடன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் மனோகரன். அப்போது, கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதோடு, உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்று மனைவியை பார்த்து கூறியுள்ளார் மனோகரன். அதனால் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார் சௌமியா.

அப்போது கணவரின் பைக், அங்கு நிறுத்தப்பட்டுள்ளதைப் பார்த்துள்ளார் சௌமியா. உடனே வாட்டர் பாட்டிலை எடுத்த சௌமியா, கணவரின் பைக்கிலிருந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்துள்ளார். பின்னர் பெட்ரோல் பாட்டிலுடன் மொட்டை மாடிக்குச் சென்ற சௌமியா, அதை ஊற்றி தீக்குளித்தார். சௌமியாவின் அலறல் சத்தம் கேட்டு மனோகரன் மற்றும் அங்கு குடியிருப்பவர்கள் மொட்டை மாடிக்குச் சென்றனர். அங்கு தீயில் சௌமியா கருகிக் கொண்டிருந்தார். உடனே தீயை அனைத்த மனோகரன், சௌமியாவை பூஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சௌமியா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சிகிச்சையிலிருந்த சௌமியாவிடம் போலீஸார் மரண வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், எனது கணவர் மனோகரன், என் மீதும் குழந்தைகள் மீதும் பாசமாக இருப்பார். சம்பவத்தன்று மதியம் ஆஃபரில் பிரியாணி வாங்க சந்தோஷமாக சென்றார். பிரியாணி இல்லாமல் குஸ்கா வாங்கிக் கொண்டு வந்ததால் எனக்கும் மனோகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் கணவரைப் பயமுறுத்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தேன். விளையாட்டாக நான் செய்த செயல் வினையாகிவிட்டது. எப்படியாவது என் கணவர் என்னைக் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். என் கணவரையும் குழந்தைகளையும் பிரிய எனக்கு மனமில்லை என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். மேலும் கணவரிடம் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சௌமியா கூறியுள்ளார். 80 சதவிகிதம் தீக்காயங்கள் என்பதால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் மனோகரனும் சௌமியாவும் மதியம் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிரியாணி தொடர்பாக சண்டை வந்துள்ளது. அப்போது, உன்னை எனக்குப்பிடிக்க வில்லை என்று விளையாட்டாக மனோகரன் கூறியுள்ளார். அதனால்தான் மனமுடைந்த சௌமியா தீக்குளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்கொலை என்றே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply