இந்த பேரழிவுக்கு முதல்வர் எடப்பாடி தான் காரணம்!- மு.க.ஸ்டாலின்

“யாருடைய ஆலோசனையும் கேட்கும் நிலையில் முதல்வர் இல்லை. இதனால்தான் தமிழ்நாடு மிக மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. இந்த பேரழிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். நான் சொன்ன ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளேன். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் சொன்னேன். இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியமாக இருக்கிறார். கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் ஆகிவிட்டது என்று மருத்துவ நிபுணர் ஜேக்கப் ஜாண் பேட்டி அளித்திருக்கிறார். பல மருத்துவர்களும் சொல்கிறார்கள். ஆனால் சமூக பரவில் இல்லை என்கிறார் முதல்வர். வெறும் வார்த்தை விளையாட்டாக நினைத்து மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார். என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல, யாருடைய ஆலோசனையும் கேட்கும் நிலையில் முதல்வர் இல்லை. இதனால்தான் தமிழ்நாடு மிக மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. இந்த பேரழிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம். பாதிக்கப்பட்ட மக்களை காக்க உருப்படியாக ஒரு நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் எடப்பாடி, தனக்கு பணம், கமிஷன் வருகிற திட்டங்களை பார்வையிட கோவைக்கும், திருச்சிக்கும் போகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2வது பெரிய படுகொலையை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது. முதலில் 13 பேரை சுட்டேக் கொன்றது இந்த அரசு. அப்போது, 2 பேரை அடித்தே கொன்றுவிட்டார்கள். இது மக்கள் மத்தியில், குறிப்பாக வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருந்து திசை திருப்புவதற்காக திமுக மீது பழிபோடுகிறார் பழனிசாமி. இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்வது ஸ்டாலின்தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியும், அவர் வைத்திருக்கும் அமைச்சர்களும் அடித்த பல்லாயிரக்கணக்கான கொள்ளையை சொல்லி எங்களால் அரசியல் நடத்த முடியும்.

முதல்வர் பதவியை வைத்து மக்களுக்கு எதையும் செய்ய தகுதியில்லாதவர் பழனிசாமி என்பதைத்தான் மக்களுக்கு தினமும் சொல்லிக்கொண்டு வருகிறேன். முதல்வர் பழனிசாமிக்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டேன். இனி சொல்வதற்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனை பட்டத்தை சூட்டிக்கொள்ளுங்கள். கொரோனாவே ஒழியாத நிலையில் ஒழித்துவிட்டதாக பொய்யான மகுடம் சூட்டிக்கொள்ளாதீங்க” என்று கூறினார்.

Leave a Reply