சாத்தான்குளம் வணிகர்கள் குடும்பத்துக்கு தி.மு.க. ரூ.25 லட்சம் நிதி உதவி கனிமொழி வழங்கினார்

கொரோனாவைவிட கொடூரமான முறையில் தமிழகக்காவல்துறை நடந்துகொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய காவல்துறையினர், சட்டத்தை தங்கள்கையில் எடுத்துக்கொள்ள அ.தி.மு.க. அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்த பெருங்கொடூரம்.

சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் தந்தையையும், மகனையும், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக்கொடுமைப்படுத்தியும், வேட்டி சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும்வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளை பிய்த்தெறிந்து மிருகத்தனமாக கொடுமைப்படுத்தி உயிர்பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்சின் தாயும், சகோதரியும் வேதனையோடும், கண்ணீரோடும் சொல்வதைக்கண்டு தமிழகமே பதறுகிறது.

இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக்குறிப்புகளிலும் உறுதிசெய்துள்ள நிலையில், உடற்கூராய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச்செயலில் ஈடுபட துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும்வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடரவேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க. துணைநிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

கணவன், மகன் என அன்பான 2 உயிர்களைப்பறிகொடுத்து, 3 பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லமுடியாமல் வேதனைத்தீயில் வெந்துகொண்டிருக்கும் செல்வராணிக்கு தி.மு.க. சார்பில் ஆறுதலினை தெரிவித்துக்கொள்வதுடன், அவர்தம் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டுக்கு கனிமொழி எம்.பி. நேற்று நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரூ.25 லட்சம் நிதி உதவியை ஜெயராஜ் மனைவி செல்வராணியிடம் வழங்கினார்.

அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாநில பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply