கொரோனா பணியில் இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொரோனா பணியில் மரணம் அடைந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் காலியாக உள்ள துணை கலெக்டர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் முக்கிய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் போராட்டம் நடந்தது. 3-வது நாளான நேற்று மாலை 1 மணி நேரம் அலுவலகப்பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலமுரளிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கண்ணன், கோலப்பன், மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மூத்த உறுப்பினர் பத்மகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க முன்னாள், இன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் ஒவ்வொரு தாலுகா தலைநகரங்களிலும் நேற்று வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Leave a Reply