`நீதி கிடைக்கும் வரை போராடுவேன்!’- தந்தை, மகன் மரணத்தை கையிலெடுத்த கனிமொழி

“சாத்தான்குளம் காவல்துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறேன். இருவரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) என்பவர் மொபைல் கடை நடத்தி வந்தார். கடந்த 20ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீஸார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜியையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.

காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் கண்முன்னே தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ் க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகவும் , அவரது ஆசன வாய் உள்ளே லத்தியால் குத்தி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவது மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் பென்னிக்ஸை சந்தித்த அவரது நண்பர்களிடம், போலீஸார் தாக்கியதில் தனது ஆசன வாயில் இருந்து ரத்தம் வந்து கொண்டே உள்ளது என பென்னிக்ஸ் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சிறையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.‌ இதற்கிடையே பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறி மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அவரும் உயிரிழந்துவிட்டார். கடையடைப்பு தொடர்பாக முதலில் பென்னிக்ஸின் தந்தையை போலீஸார் அழைத்துச்சென்றதாகவும், காவல் நிலையம் சென்று அதுகுறித்து வாக்குவாதம் செய்ததால் பென்னிக்ஸை போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும், அதன் பின்பே கோவில்பட்டி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவரது உறவினர்கள் கூறினர்.

இந்த நிலையில், பென்னிக்ஸ் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முன்னதாக தந்தை, மகனின் உடல்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது உடலுக்கு திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசியபோது, காவல்துறையினர் மற்றும் முதல்வர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார் கனிமொழி.

தற்போது இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார் கனிமொழி. அவர் எழுதியுள்ள கடிதத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னீஸ் மரணத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட ஒரு காவல்துறையினர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply