தொடரும் அத்துமீறல்… போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை! – பால் முகவர் சங்கம் அறிவிப்பு

பால் விநியோகம் செய்யும் தொழிலாளர்கள் மீது போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வது இல்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மாநிலம் முழுவதும் இன்று வணிகர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் பால் விநியோகம் செய்யும் தொழிலாளர்களும் தாக்கப்படுவதாக கூறி, போலீசார் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவது இல்லை என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முடிவெடுத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகத்தில் ஈடுபட்டு பால் முகவர்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களை பறிமுதல் செய்வது, வாகனங்களை தடுத்து நிறுத்துவது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணையாளர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது.

எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினரால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply