கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்தும் சட்டம் தமிழகத்துக்குத் தேவையில்லை! – செல்லூர் ராஜூ எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் சட்டத்துக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடப்பதாக கூறி அவற்றை ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து மதுரையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத உள்ளார். பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததால்தான் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. நம்முடைய முன்னோர்கள் எல்லாம் மிக நுணுக்கமாகச் சட்டத்தை உருவாக்கியுள்ளனர். எனவே, தமிழகத்திற்கு அப்படி ஒரு சட்டம் தேவையில்லை.

இந்த சட்ட முன்வடிவு தயாராகும் நிலையிலேயே, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று கடந்த மார்ச் 24ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். மீண்டும் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் செயல்பாடு, தமிழகத்தில் பின்பற்றப்படும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு இந்த சட்டம் தேவையில்லை என்று முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளார்” என்றார்.

Leave a Reply