ஆகஸ்ட் 14ல் சசிகலா விடுதலையா? மறுக்கும் கர்நாடக சிறைத்துறை

ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று பா.ஜ.க நிர்வாகி கூறியதற்கு கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் மறுப்பு தெரிவிக்கின்றன.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2017ம் ஆண்டு சசிகலா சிறைக்கு சென்றார். நன் நடத்தை, விடுமுறை உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு அவர் செப்டம்பர் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளது என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி தன்னுடைய சமூக ஊடகபதிவில் ஆகஸ்ட் 14ம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக பதிவிட்டார். இதைத் தொடர்ந்து சசிகலா ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாக உள்ளதாக சிறைத்துறை நிர்வாகமே உறுதி செய்தது போன்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

இது உண்மையா என்று கர்நாடக சிறைத்துறையைத் தொடர்புகொண்டு கேட்டபோது அது பற்றி கருத்து கூற மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் சசிகலா விடுதலை தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஆகஸ்ட் 14ம் தேதி விடுதலையாகிறார் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று சிறைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதி, செப்டம்பர் மாதத்தில் சசிகலா விடுதலை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply