வெளி மாவட்டத்தில் இருந்து குமரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி இதுவரை மண்டலத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்ய வழங்கப்பட்ட அனுமதி இன்று (வியாழக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வருவதற்கு கண்டிப்பாக இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை. மேலும் இன்று பொது போக்குவரத்து குமரி மாவட்டத்திற்குள் மட்டும் செயல்படும். கொரோனா நோய் பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 222 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் 39 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 157 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 1,028 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 8,061 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8465 வழக்குகளும், 6305 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply