மார்த்தாண்டம் தேனி வளர்ப்போர் சங்க அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு

மார்த்தாண்டம் தேனி வளர்ப்போர் சங்க அனைத்து உறுப்பனர்களின் தேனை கொள்முதல் செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதனால், தேனி விவசாயிகள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உற்பத்தி செய்யப்பட்ட தேன் கெட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் இவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்க உறுப்பினர்கள் அலுவலகம் முன் ஏற்கெனவே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், பிரச்னைக்கு தீர்வு ஏற்படாததால் நேற்று மார்த்தாண்டம் தேனி வளர்ப்போர் சங்க அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலங்க போஸ் தலைமையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். சங்க உறுப்பினர்கள் சைனி கார்ட்டன் தலைமையில், ஜெஸ்டின்விஜயகுமார், ஜெயகுமார், ஷாஜி, ரூபன், ரெகுபதி, புரூஸ்லி மற்றும் ஏராளமான  சங்க உறுப்பினர்கள் அங்கு திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து போராட்டம் நடத்த கூடாது என தெரிவித்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதைதொடர்ந்து போலீசார் ஷைனிகார்ட்டன், மனோதங்கராஜ் எம்எல்ஏ ஆகியோரை அழைத்து சென்று சங்க செயலாட்சியர் நல்லதம்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொள்முதல் செய்யப்படும் தேனை பாதுகாத்து வைத்திட சங்க அலுவலகத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கொள்முதல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள அரசு தேன்குடோன் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் வைக்க மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் 15 நாட்களுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 15 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படாவிடில் பாதிக்கப்பட்டுள்ள தேன் விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என ஷைனிகார்ட்டன் தெரிவித்தார்.

Leave a Reply